தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: உதகையில் ஓட்டலுக்கு அபராதம்
உதகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க, நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உதகை கமர்சியல் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் கப்புகளை பயன்படுத்துவதாக கலெக்டருக்கு புகார் வந்தது.
அதன்பேரில், உதகை நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜ் உத்தரவின்படி, நகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். அதில், தடை செய்த கப்புகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 2 1/2 கிலோ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.