பணம் வைத்து இரவில் வெட்டாட்டம்; காட்டேஜை சுற்றி வளைத்து 15 பேர் அதிரடி கைது
உதகை நகரில் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
உதகை சிவசக்தி, மவுண்ட் பிளசன்ட் பகுதியில் உள்ள தனியார் காட்டேஜில் சிலர் பணம் வைத்து இரவில் வெட்டாட்டம் ஆடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நள்ளிரவு 2:00 மணியளவில், ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 10 க்கு மேற்பட்ட போலீசார் அங்கு சென்று காட்டேஜை சுற்றிவளைத்தனர். போலீசார் வந்திருப்பதை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்ப முயன்றனர். போலீசார் உள்ளே நுழைந்து காட்டேஜ் கதவை மூடினர்.
அங்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் பணம் வைத்து ரம்மி சீட்டு மூலம் வெட்டாட்டம் ஆடியது தெரியவந்தது. சோதனையிட்ட போலீசார் 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து, அங்கிருந்தவர்களை வாகனத்தில் ஏற்றி பி1 போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.
இதில், நீல சந்திரன், 49, சபரீஷ், 27, முருகன், 52, சீனிவாசன், 57, சுபேர்,45, நாகூர்மீரான், 50, பாலகிருஷ்ணன்,44, ரங்கநாதன், 38, மூர்த்தி, 50, லட்சுமணன், 49, தியாகராஜன், 47, பாரூக், 38, பயாஸ், 37, சசிக்குமார், 43, ராம்சிங், 53 ஆகிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் உதகை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.