உதகையில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது
உதகையில், மதுபான கடை ஒன்றில், கள்ள நோட்டை கொடுத்த போது கையும் களவுமாக சிக்கினார்.
உதகை, லோயர் பஜார் டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபானம் வாங்க பணம் கொடுத்தார். அது கள்ள நோட்டு என தெரிந்தது. கடை முன்பு மதுபிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர் பணத்தை வாங்கி பார்த்தபோது கள்ளநோட்டு என்று உறுதியானது. அவர் உதகை நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில், கோவை ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த தீனதயாளன் (வயது 32) என்பவர் கள்ள நோட்டு கொடுத்து, மதுபானம் வாங்க முயன்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து இரண்டு, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தீனதயாளன், பாண்டிச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் (25), காந்தல் குருசடி காலனியை சேர்ந்த அப்துல் ரகுமான் (28) ஆகிய 3 பேரும் கோவையில் இருந்து கள்ள நோட்டுகளை வரவழைத்து, அந்த நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக தீனதயாளன், கோபிநாத், அப்துல் ரகுமான் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 500 ரூபாய் மதிப்புள்ள 51 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.