திருமணமான பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கிரேன் ஆபரேட்டர் கைது
சமூக வலைத்தள குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்கள் எவ்வித தயக்கமுமின்றி காவல்துறையை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரது செல்போன் எண்ணுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
திருமணமாகியும் தொல்லை கொடுத்தார். மேலும் வாட்ஸாப் செயலி மூலம் ஆபாசமான புகைப்படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் உதகை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை திருவண்ணாமலை சென்று விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் குன்னூர் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய சரவணனை போலீசார் கைது செய்து உதகைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் மூலம் பணமோசடி, பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தவறான தகவல்கள் மற்றும் காணாமல் போகும் செல்போன்களை கண்டுபிடித்து தருதல் போன்றவற்றின் மீது விசாரணை செய்து வழக்கு பதியப்பட்டு வருகிறது.
எனவே, சமூக வலைத்தள குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்கள் எவ்வித தயக்கமுமின்றி காவல்துறையை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.