கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து டாஸ்மாக்கில் கூட்டம்

Update: 2021-04-14 04:15 GMT

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்று நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதில் கொரோனா பாதித்த பகுதிகளில் இருந்து வெளியே செல்பவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும், சுற்றுலாத் தலங்களில் 50% சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி, உள்ளிட்ட பல விதிமுறைகளை கடைபிடிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதால் மது பிரியர்கள் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதுபானங்களை வாங்குவதற்கு அலைமோதுகின்றனர். இதனால் எளிதில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News