நீலகிரி மாவட்டம் முழுவதும் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்: மக்கள் ஆர்வம்

இரண்டாவது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தி அடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டினர்

Update: 2021-10-10 11:30 GMT

உதகையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நீலகிரி மாவட்டத்தில் 5-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 312 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கிராமப்புறங்களில் 169 மையங்கள், பேரூராட்சிகளில் 80 மையங்கள், நகராட்சிகளில் 43 மையங்கள் மற்றும் 20 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தி அடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டினர். உதகை பிங்கர்போஸ்ட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சுற்றுலா தலங்களுக்கு முன்பு ஒலிபெருக்கி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, இன்று (அதாவது நேற்று) நடந்த 5-ம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் 32,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இலக்கை விட அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 2-வது டோஸ் செலுத்த கால தாமதமின்றி முன்வர வேண்டும். அப்போதுதான் நீலகிரி மாவட்டம் முழுமையாக தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். ஆய்வின் போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News