உதகை அருகே பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
உதகை அருகே மஞ்சூர் பள்ளியில் மேலும் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்;

பைல் படம்
உதகை அருகே மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மஞ்சூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு உறுதியானது.அந்த மாணவி சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பாதித்த மாணவி பள்ளிக்கு வந்து சென்றதால், பிற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கடந்த 16-ந் தேதி 9, 10-ம் வகுப்பு மாணவிகள், ஆசிரியர்கள் என 90 பேரிடம் இருந்து சுகாதார குழுவினர் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். முடிவு வெளியானதில், மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.