அதிமுக வேட்பு மனுக்களை நிராகரிப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு
அதிமுக வேட்பு மனுக்களை நிராகரிப்பதாக தகவல் பரவியதையடுத்து, நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகாரளித்தனர்.;
மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்க வந்த அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்.
தமிழகத்தில் எதிர்வரும் 19-ம் தேதி நகர்புற மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, உதகை நகராட்சி அலுவலகத்தில் காலை முதலே வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களின் மனுக்கள் மீதான பரிசீலனையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதை தெரிந்து கொண்ட திமுகவினர், தோல்வி பயத்தின் காரணமாக காலை முதலே உதகை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினரின் மனுக்களை நிராகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, உதகை 19-வது வார்டில் போட்டியிடும் அதிமுக இளம் முதுகலை பட்டதாரியின் வேட்புமனுவை நிராகரிக்க திமுகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.