உதகையில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்த கலெக்டர்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, காந்தியின் படத்திற்கு மரியாதை செலுத்தி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்தார்
உதகை சேரிங்கிராஸில் உள்ள கதர் அங்காடியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.72 லட்சம் ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நீலகிரியில் ரூ.20.96 லட்சம் மதிப்பில் கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டை போல் நடப்பாண்டிலும் மாநில அரசு மற்றும் கதர் கிராம தொழில் ஆணைக் குழுவினரால் தள்ளுபடி அளித்து உள்ளது. காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர அரசு போக்குவரத்து கழகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 4 தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைத்து கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற கைவினைஞர்கள் முன்னேற்றத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் உதகை சப்-கலெக்டர் மோனிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.