உதகை அரசு தாவரவியல் பூங்கா 2ம் சீசனுக்காக தயார்
உதகையில், 2ம் சீசனுக்காக தாவரவியல்பூங்காவில் மாடங்களில்பூந்தொட்டிகளை கலெக்டர் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சியை துவக்கினார்;
உதகை தாவரவியல் பூங்காவில், மலர் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சியை, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 2-வது சீசனையொட்டி, 100-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது மலர் பாத்திகள், பூங்காவின் நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால், பூங்காவே வண்ண மயமாக காட்சி அளிக்கிறது.
உதகை 2-வது சீசனை முன்னிட்டு, மலர் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், துணை இயக்குனர் குருமணி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து டேலியா, சால்வியா, சென்டோரியா, மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்பட 120 ரகங்களை சேர்ந்த 12 ஆயிரம் மலர் பூந்தொட்டிகள் காட்சிக்கு அடுக்கி வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 2 ஆயிரம் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு, புல்வெளியில் அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரு மாதம் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏதுவாக, இது திறக்கப்பட உள்ளது.