தமிழக அரசை கண்டித்து உதகையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை குறை கூறிக்கொண்டிருப்பதே திமுக அரசின் வேலை என பாஜக குற்றச்சாட்டு.;
மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ.,வையும், நீட் தேர்வையும் எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில் தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசியதாவது:
மத்திய அரசு எந்த ஒரு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை குறை கூறிக்கொண்டு செய்யாமல் இருப்பதே ஆளுங்கட்சி திமுகவின் வேலையாக இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் இன்று ஏழை எளிய மாணவர்கள் மருத்துவர் கனவை நனவாக்கி வரும் நிலையில், நீட் தேர்வை பற்றிய அச்சத்தை மாணவர்களிடையே அதிகப்படுத்தி வருகிறது. நீட் அச்சத்தால் உயிரிழக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தை தராமல், இறந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு தொகையை வழங்கி மத்திய அரசு மீது குறை கூறி வருவது தொடர்ந்து வருகிறது.
அதேபோல் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை வேண்டுமென்றே எதிர்த்து மத்திய அரசின் மீது மக்களுக்கு எப்படியாவது வெறுப்பு ஏற்படும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட போஜராஜன், நீலகிரி மாவட்ட துணைத்தலைவர்கள் பரமேஸ்வரன், பார்ப்பண்ணன், பொது செயலாளர்கள் ஈஸ்வரன், கே ஜே குமார், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆனந்த் ஆபிரகாம், நகர செயலாளர் சுரேஷ் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.