உதகை தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் தொடக்கம்
கடந்த ஏப்ரல் மாதம் தொட்டபெட்டா சாலை சேதம் அடைந்தது; இதனால் 7 மாதங்களாக தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழையால், நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா சாலை சேதம் அடைந்தது. இதனால் 7 மாதமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டது. இந்த நிலையில், சாலையை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இன்று பூஜை செய்து சாலைப் பணியை துவக்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஏப்ரல் மாதம் தொட்டபெட்டா சாலை சேதமடைந்ததால் தொட்டபெட்டா மலைச் சிகரம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, ஒரு மாதத்திற்குள் சாலை பணியை முடிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.
தொட்டபெட்டா மலைச் சிகரம் மூடப்பட்டிருந்ததால், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், சாலை சீரமைக்கப்பட்டால் எப்போதும்போல் சுற்றுலாப்பயணிகள் தொட்டபெட்டா வருகை புரிவார்கள். இதனால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என அமைச்சருக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர்.