உதகையில் தேனி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் துவங்கியது
உதகையில், தேனி வளர்ப்பு குறித்த, 7 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம், இன்று தொடங்கியது.;
உதகையில், தேனி வளர்ப்பு குறித்த 7 நாள் இலவச பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
பிரதம மந்திரி வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் சார்பில், உதகையில் அறிவியல் முறையில் தேனி வளர்ப்பு குறித்த, 7 நாள் இலவச பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
தேசிய பால்வள வாரியத்தின சென்னை மண்டல உதவி இயக்குநர் கிருத்திகா, பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். தேன் புரட்சி மூலம் விவசாயிகள் வருவாயை அதிகரிக்கும் வகையில், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில், தமிழகத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் இந்த பயிற்சி நடத்தப்படுவதாகவும், இதை தொடர்ந்து பிற மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
வேளாண் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வருமானத்தை ஏற்படுத்தி தர, மத்திய வேளாண் அமைச்சகம் இத்திட்டத்தை தேசிய பால் வள வாரியத்திற்கு அளித்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார். இந்த பயிற்சியில் 25 பெண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு களப் பயிற்சி அளித்து உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முகாமில் நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய மேலாண் இயக்குநர் வெங்கடாச்சலம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.