நீலகிரியில் 3 நாள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு

சுற்றுலா நகரமான நீலகிரியில் இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது கலெக்டர் அறிவிப்பு.

Update: 2021-12-31 08:17 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இரவு 11 மணிக்கு மேல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா நகரமான நீலகிரியில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் நட்சத்திர விடுதிகள், தனியார் காட்டேஜ்கள், ஆலயங்கள், உட்பட அனைத்து இடங்களிலும் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பது உடன் அனைத்து சுற்றுலா தலங்களிலும் முக கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழி நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் இரவு நேரங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News