கோடநாடு வழக்கு விசாரணையில் இன்று ஒருவர் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கார் விபத்தில் இறந்த கனகராஜின் நண்பர் குழந்தை வேலு என்பவரிடம் 5 மணி நேரம் விசாரணை.;
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுத்தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜம்சீர் அலி, ஜித்தின்ஜாய் ஆகிய இருவரும் இன்று ஆஜராக வாய்ப்பு இருந்த நிலையில் ஜம்சீர் அலிக்கு கொரோனா காரணமாகவும், ஜித்தின்ஜாயின் உறவினரின் திருமணம் என்பதால் இந்த இருவரும் இன்று ஆஜராகவில்லை.
போலீசார் அவர்களுக்கு குறிப்பிடும் தேதி கூறிய பிறகு இந்த விசாரணையில் இருவரும் ஆஜராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு சென்னையை சேர்ந்த குழந்தை வேலு என்பவரிடம் ஐ.ஜி சுதாகர், மாவட்ட எஸ்.பி ஆஷிஸ்ராவத் குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விபத்தில் இறந்த கனகராஜுன் நண்பர் ஆவார். இவர்கள் சில காலம் ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள். இதனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கனகராஜிடம் நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்பதும் குறித்து விசாரணை நடத்தினர்.