கோத்தகிரி வங்கியில் போலி நகைகள் வைத்த 11 பேர் கைது: போலீசார் அதிரடி
கோத்தகிரியில் உள்ள வங்கியில் விவசாய கடனுக்காக போலி நகைகள் வைத்ததாக 38 பேரில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் விவசாய கடனுக்காக போலி நகைகளை வைத்ததாக 11 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி ஈளாடாவில் இயங்கி வரும் வங்கியில் கடந்த 18.07.2018 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு தேதிகளில் 08.09.20 வரை 74 கணக்குகளில் 38 வாடிக்கையாளர்கள் போலி நகைகள் வைத்துள்ளது தெரியவந்தது. நகை மதிப்பீட்டாளர் சிவாவுடன் சேர்ந்து, ரூ.94 லட்சத்து 45 ஆயிரத்து 500 தொகையை பெற்றுள்ளனர்.
அவர்களது பழைய நகை கடன்கள் பயிர்க் கடன்கள், மற்ற வெளிக் கடன்களுக்கு மாற்றியும் பணம் எடுப்பு சீட்டு மூலம் எடுத்து பயன்படுத்தியும், முறையற்ற லாபம் அடைந்தும் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பணம் திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி உள்ளதாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட 38 பேரில் 11 பேரை கோத்தகிரியில் போலீசார் கைது செய்து உதகை பழைய எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து தனித்தனியாக 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, 11 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வங்கியில் போலி நகைகள் அடகு வைத்ததாக 11 பேர் சிக்கிய சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.