நீலகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி: கலெக்டர் தகவல்
நாளை 32,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 62,000 டோஸ் கையிருப்பு உள்ளது கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரியில் 5-ம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.
கிராமப்புறங்களில் 169 மையங்கள், பேரூராட்சிகளில் 80 மையங்கள், நகராட்சிகளில் 43 மையங்கள், 20 நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 312 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை முதல் மதியம் வரை மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். மதியத்திற்கு பின்னர் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாளை 32,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 62,000 டோஸ் கையிருப்பு உள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் 1,248 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். நீலகிரியில் 18 வயதுக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் 5,420 பேர் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த முடியாததால், வீடு தேடி சென்று செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் 5 லட்சத்து 16 ஆயிரத்து 845 பேருக்கு போடப்பட்டது. இது 99.5 சதவீதம் ஆகும். 4,215 பேர் கொரோனா பாதித்து உள்ளதால் தடுப்பூசி எடுக்க முடியவில்லை. அவர்களுக்கு 90 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும்.
18 வயது நிரம்பி, பிறந்தநாள் முடிந்து முதல் டோஸ் எடுத்துக்கொள்ளும் இளைஞர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புள்ள 18 விருதும், ரூ.3 ஆயிரத்துக்கான பரிசு வவுச்சர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இணை நோய் உள்ள நபர்களில் முதல் டோஸ் செலுத்தும் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, பிரேவ் ஹார்ட் விருதும் ரூ.3 ஆயிரத்துக்கான பரிசு வவுச்சரும் வழங்கப்படும். 2-வது டோஸ் 2 லட்சத்து 40 ஆயிரத்து 595 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது 46 சதவீதம் ஆகும்.
ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி செலுத்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கும். தடுப்பூசி செலுத்தி இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி உடனிருந்தனர்.