உதகையில் ரூ. 1 கோடி மதிப்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
2020- 21 ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் நான்கு வட்டாரங்களில் உள்ள 2,000 சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 20 உற்பத்தியாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் அரசின் சார்பாக பண்ணை இயந்திரங்கள், பாகங்கள் தொகுப்பு நிதியாக தலா ரூ. 5 லட்சம் வீதம் 20 குழுக்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிர் திட்ட செயலாக்கத்திற்கு தேவையான இயந்திரங்கள் வட்டார அளவில் உதகை 48, கோத்தகிரி 33 , கூடலூர் 19 மற்றும் குன்னூர் 3 வீதம் மொத்தம் 103 பண்ணை இயந்திரங்கள் மாவட்ட குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தொகுப்பு நிதியில் வாங்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அரசு ரோஜா பூங்கா வளாகத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் மகளிர் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் அவர்களை முன்னிலைப்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனை தலைவர், தோட்டக்கலை இணை இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் கூட்டுப்பண்ணை திட்டம் 2020 -21 ஆம் ஆண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இந்த பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டதாக ஆட்சியர் கூறினார்.