நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர்

உதகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளைவழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி .

Update: 2021-02-08 08:47 GMT

நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நீலகிரியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முன்னதாக உதகை நகராட்சி மார்க்கெட் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டு சுமார் 82 கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன. அக் கடைகளுக்கு ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கி தற்போது இன்று கடைகளைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதையடுத்து அரசு தாவரவியல் பூங்கா செல்லும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அதிமுக அரசு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் நிறைவுபெற்ற பணிகள் குறித்தும் பட்டியலிட்டு பேசினார்.

மேலும் பழங்குடியின மக்களுக்கு மண்பானை செய்யும் நவீன இயந்திரத்தையும், மகளிருக்கு இருசக்கர வாகனம், விலையில்லா ஆடுகள் மற்றும் கோழிகளை வழங்கினார். மேலும் வருவாய் துறை தோட்டக்கலை , ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேளாண்மை பொறியியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை , சார்பில் என மொத்தம் 3 ஆயிரத்து 852 பயனாளிகளுக்கு 11.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே அர்ஜுனன், உதகை ஊராட்சி மன்ற தலைவர் மாயன் உட்பட கட்சி நிர்வாகிகளும் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News