கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்து
இரண்டு வருடங்களுக்குப் பின் உதகை கல்லட்டி மலைப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாறை மேல் மோதியது .;
உதகையில் இருந்து 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக இலகு ரக வாகனங்கள் மைசூர் மற்றும் கேரளப் பகுதிக்கு செல்லக் கூடிய பிரதான சாலையாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து ஐந்து பேர் கல்லட்டி மலைப்பாதையில் செல்லும்போது அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானவர்களின் தகவல்கள் கிடைக்கப் பெறாமல் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து கல்லட்டி மலைப்பாதையில் அவர்களின் தொலைபேசி இணைப்பு கடைசியாக பதிவானதை அறிந்த காவல்துறையினர் இச்சாலை வழியே முழுவீச்சில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளில் அவர்கள் 5 பேரில் 3 பேர் இறந்தும் 2 பேர் வாகனத்தில் பலத்த காயப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதனால் அச்சாலை வழியே செல்லக் கூடிய வாகனங்கள் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று இச்சாலையில் அனைத்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இது சமூக ஆர்வலர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று கேரள பதிவு எண் கொண்ட இலகு ரக வாகனம் ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக இதில் பயணம் செய்த அனைவருக்கும் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர். செங்குத்தான இந்த மலைப்பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்தாலும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.