ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் குன்னூர் அருகே கேத்தி அச்சனக்கல் கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் கேத்தி அருகே அச்சனக்கல் மணெப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அவில்தார் விவேகானந்த். ராஜஸ்தானில் ராணுவ உளவு பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் -ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில், உயர்அதிகாரி ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பலோத்ரா என்ற இடத்தில் லாரியை கடக்க முயன்ற போது எதிரே காட்டுமாடு வந்ததால் பிரேக் பிடித்த போது கார் கவிழ்ந்ததில் விவேகானந்த் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விமானம் மூலம் இவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வாகனம் மூலம் அச்சனக்கல் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.
குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில், ராணுவ அணிவகுப்புடன், உடல் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து தேசியக்கொடி போர்த்தப்பட்டு, துணைகமாண்டன்ட் கர்னல் அணில் பண்டித் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பிறகு, வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விவேகானந்த் மனைவி அனிதாவிடம் தேசிய கொடியை கர்னல் அணில் பண்டித் ஒப்படைத்தார். கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீருடன் இறந்தவர் உடலை அடக்கம் செய்தனர்.