நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில் ராட்சத பாறை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தில் தீவிரமடைந்து வருகிறது. நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக நகர் மற்றும் ரூரல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. பகல் நேரங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரியில் மழை தீவிரமடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரி மழை அளவு 4.04 மி. மீ., ஆக பதிவாகியுள்ளது.
நேற்று மாலை, மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில், கேரிங்டன் அருகே சாலையோரத்தில் இருந்த பாறை கற்கள் சரிந்து சாலை நடுவே விழுந்தது. இதனால் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, உதவி செயற்பொறியாளர் பாலசந்திரன் தலைமையில், நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் பாறைகளை உடைத்து அகற்றும் பணி நேற்றிரவு வரை நடந்தது. பின்பு இன்று சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டது.