உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்
இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுரை.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தவிர்ப்பது தொடர்பாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த சோதனை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு, ரூ.26 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 6.750 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.16 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.