கோத்தகிரியில் வன விலங்குகளின் உடல் பாகங்கள் விற்பனை : ஒருவர் கைது
நீலகிரி மாவட்டத்தில் யானை தந்தம், புலிநகம், மான் கொம்புகள் போன்றவைகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி :
கோத்தகிரியில் யானை தந்தங்களில் செய்த கைவினைப் பொருட்களை உட்பட வனவிலங்குகளின் தோல் மற்றும் எலும்புகளை கொண்டு கைவினைப் பொருட்களை செய்து பல லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். யானை தந்தம் மற்றும் எலும்புகளில் செய்த விலை உயர்ந்த கைவினை பொருட்களை அவரிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி ராம்சந்த் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (73). இவர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள், வாசனை திரவியங்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வின் போது வன விலங்குகளின் எலும்புகள் மற்றும் யானையின் தந்தம் போன்ற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்து வந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் கோத்தகிரி பகுதியிலும் இதே போன்று யானையின் தந்தம் மற்றும் வனவிலங்குகளின் தோல் , எலும்புகளை கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து ஒருவர் விற்பனை செய்து வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நீலகிரி நீலகிரி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் ஒரு குழு அமைத்து நேற்று மாலை நாகராஜ் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டில் யானை தந்தங்கள் மற்றும் வனவிலங்குகளின் தோல், எலும்புகளில் செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதவிர மான்கொம்பு உட்பட விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகளில் செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் புலித்தோல், புலி நகம் போன்ற பொருட்களை பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.