குன்னூரில் சிறுத்தை நடமாட்டம்
குன்னூரில் பிரதான சாலை வழியே உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது வறண்ட காலநிலை நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுகிறது. மேலும் சாலைகளிலும் நடமாடுகின்றன. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துவருகின்றனர்.
இந்நிலையில் வண்டிச்சோலையில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில், தனியார் மகளிர் கல்லூரி அருகே சாலையோரத்தில் சிறுத்தை அமர்ந்திருந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதை பார்த்ததும் பீதி அடைந்து, வாகனங்களை நிறுத்தினர். சிறிதுநேரம் அமர்ந்திருந்த சிறுத்தை திடீரென சாலையை கடந்து மறுபுறத்தில் பாய்ந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
வாகனங்களில் இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் இதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர். அத்துடன் சிலர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் ,தற்போது நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அடிக்கடி சாலையை கடந்து செல்கிறது. எனவே இந்த வழியாக செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும்என்று அறிவுறுத்தினர்.