"ஊரடங்கு எங்களுக்கு இல்லிங்கோ..." கோத்தகிரி சாலையில் கரடிகள் உலா
நீலகிரி மாவட்டம் கோத்திகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில், சர்வ சாதாரணமாக கரடிகள் உலா வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
மக்கள் உள்ளே... விலங்குகள் வெளியே: ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்க, எங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்று சொல்வது போல், சாலையில் சர்வசாதாரணமாக நடமாடும் கரடிகள். இடம்: கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி ரோடு.
கொரோனா ஊரடங்கால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி, பல இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர் வீழ்சிக்கு செல்லும் சாலையும் மனித நடமாட்டமின்றி காணப்படுவதால், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகளில் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான கேத்தரின் நீர்வீழ்சிக்கு செல்லும் சாலையில், கரடிகல் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்களும் குடியிருப்புவாசிகள் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், பல இடங்களும் வெறிச்சோடியுள்ளன. ஆனால், அந்த கட்டுப்பாடுகள் எல்லாம் எங்களுக்கு பொருந்தாது என்பது போல், கரடி உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது, அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை, மக்கள் நடமாட்டம் இயல்பானதும், வனவிலங்குகள் காட்டுக்குள் சென்று விடும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.