கூடலூரில் வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
கூடலூர் அருகே நள்ளிரவில் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தின் தாக்குதலில் பழங்குடியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளால் மக்கள் உயிர்போகும் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விநாயகன் என்ற காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை அலவயல் பகுதியில் நேற்று இரவு 11 மணிக்கு பழங்குடியினர் கிராமத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் அவர்களது வீட்டை சூறையாடி அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தியது இதில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த இரு குடும்பத்தினர் உயிர்தப்பினர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ பகுதிக்கு சென்ற வனத்துறையினர், சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். தொடரும் யானைகள் அட்டகாசத்தால் கூடலூர் மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர்.