விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம்; வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி மக்கள் எதிர்ப்பு

Nilgiri News, Nilgiri News Today- ஓவேலி பேரூராட்சி, காந்தி நகரில் விவசாய நிலத்தில், கண்காணிப்பு கோபுரம் அமைப்பதை எதிர்த்து மக்கள், வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.

Update: 2023-08-27 07:19 GMT

Nilgiri News, Nilgiri News Today- வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today -கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி, காந்தி நகரில் விவசாய நிலத்தில், கண்காணிப்பு கோபுரம் அமைக்க கூடாது என, வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி, மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி முழுவதும் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் 5 இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அறிய கண்காணிப்பு கோபுரம் மற்றும் முகாம் அமைக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இதில் காந்திநகர் கிராமத்தையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த காலங்களில் பணி தொடங்க உள்ள சூழலில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் தொடங்கப்பட்டது. இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும். அதனை விடுத்து மக்கள் விவசாயம் செய்து வரக்கூடிய நிலங்களில் அமைக்க கூடாது. இதனால் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இங்கு அமைக்க கூடாது. மேலும் மக்கள் வசிக்கும் பகுதிகள், வனப்பகுதிகள் அளவீடு செய்து அறிவிக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News