கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் புலி தாக்கி பசுமாடு இறந்த சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் யானை, புலி , நடமாட்டம் அவ்வப்போது காணப்பட்டு வருவதால் பொதுமக்கள் நாள்தோறும் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் அம்பலமூலா எனும் பகுதியில் இரவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த புலி அங்கிருந்த பசு மாட்டை அடித்துக் கொன்றது. பசுமாடு அலறியதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே சென்று பார்த்தபோது கன்றுக்குட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது.
பின்பு பொதுமக்கள் அனைவரும் கூச்சலிட்டதையடுத்து புலி வனப்பகுதிக்குள் சென்றது.எனவே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பசுமாட்டை தாக்கிய புலி மனிதர்களைத் தாக்ககூடும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பசுமாட்டை புலி தாக்கி கொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் மற்றவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.