கூடலூரில் காயத்துடன் சுற்றி திரியும் யானைக்கு சிகிச்சை
கூடலூரில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை,வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவுடன் இணைந்து பழங்களில் மாத்திரை , மருந்துகளை வைத்து யானைக்கு சிகிச்சை.
நீலகிரி மாவட்டம் கூடலூர், மேல் கூடலூர், கோக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டம் போன்ற பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இடுப்புப்பகுதியில் காயத்துடன் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. வலியுடன் சுற்றித்திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உத்தரவின்பேரில் : வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழு யானையை கண்காணித்து வருவதுடன், அந்த யானைக்கு பழங்கள் மூலம் மருந்து மாத்திரை போன்றவற்றை கலந்து உணவு கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த யானை தற்போது மேல் கூடலூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் தற்போது தனியாக வனத்துறையினர் குழு அமைத்து, யானைக்கு சிகிச்சை அளிப்பதுடன் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதை தடுக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது காயம் மற்றும் வலியால் சுற்றித்திரியும் யானை இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் தேவையின்றி பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாடக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து யானைக்கு பழங்கள் மூலம் மருந்து, மாத்திரை அளித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.