சிகிச்சை பெறும் ரிவால்டோ யானை - வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
முதுமலையில் சிகிச்சை அளித்து பராமரிக்கப்படும் ரிவால்டோ யானையை, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டார்.;
உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா உள்ளிட்ட கிராம பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டுயானை சில ஆண்டுகளாக சுற்றி திரிந்து வந்தது. இந்த யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட பலத்த காயத்தால், சுமார் அரை அடி தும்பிக்கை துண்டாகியது. இதனால், மற்ற யானைகளை போல தனது தும்பிகையை பயன்படுத்தி உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த மே மாதம் அந்த யானையை பிடித்த வனத்துறையினர், முதுமலையில், உணவு பொருட்களுடன் மரக்கூண்டுக்குள் அதை அடைத்தனர். அங்கு வைத்து, அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக மரக்கூண்டில் உள்ள ரிவால்டோ யானையை மீண்டும் வன பகுதியில் விட வேண்டும் என, அண்மையில் மேனகா காந்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ரிவால்டோ யானையை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், இன்று நேரில் பார்வையிட்டார். யானைக்கு தரப்படும் சிகிச்சை, அதன் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் தவித்து வந்த சேரன் யானையை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமசந்திரன், " ரிவால்டோ யானையின் தும்பி கையில் ஏற்பட்ட காயத்தால் நிரந்தர குறைபாடு ஏற்பட்டு மற்ற யானைகளை போல் உணவு எடுக்க முடியவில்லை. அதனை வெளியில் விட்டால் மீண்டும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி வரும். எனவே இந்த யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்படும் என்றார்.