பந்தலூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
போலீசார் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அப்போது அதில் 300 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜாரில், சேரம்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 300 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டது என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்கள், சரக்கு வாகனம், ரூபாய் 10 ஆயிரத்து 700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வாகன ஓட்டுநரான செரீப் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜாரில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சேரம்பாடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அதை வைத்திருந்த வியாபாரி மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.