அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுரை
கூடலூர் ஸ்ரீ மதுரை அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, ஸ்ரீ மதுரை அம்பலமூலா கிராமத்தில் கடந்த இரு மாதங்களில் சுமார் 6 பசுமாடுகள் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. நேற்றைய தினம், கொட்டகையில் இருந்த பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து உடனடியாக புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து, அறிவுரைகளை வழங்கினர்.
பொதுமக்கள் இரவு நேரங்களில் மற்றும் அதிகாலை வேளையில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் புலி நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.