கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த பசுவை வைத்து ஸ்ரீ மதுரை ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புலி ஒன்று அப்பகுதியில் உள்ள வளர்ப்பு மாடுகளை தாக்கி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பலமுறை வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு முறை வளர்ப்பு மாடுகளை அடித்தது கொன்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினரிடம் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று ஒரு மாட்டையும், அந்த புலி தாக்கி உள்ளது. இதனைஅடுத்து அப்பகுதி மக்கள் கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த மாட்டை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக தமிழக அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.