நெருங்குது ஓணம் பண்டிகை; நேந்திரன் வாழை விலை 'விர்ர்'

ஓராண்டுக்கு பின், நேந்திரன் வாழையின் விலை கிலோவுக்கு 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால், கூடலுார் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-08-20 13:23 GMT

நேந்திரன் வாழை விலை உயர்வால், கூடலுார் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலுார், பந்தலுார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நேந்திரன் வாழை உற்பத்தியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் நேந்திரன் வாழை, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு நேந்திரன் வாழையை கிலோ 10 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தொடர்ந்த விலை வீழ்ச்சியால் கடும் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் பலர், நேந்திரன் விவசாயத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் நடப்பாண்டு ஜன. முதல் நேந்திரன் வாழையின் விலை உயர துவங்கியது. தற்போது கிலோவுக்கு 43 ரூபாய் விலை கிடைத்து வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில் ' வரும் செப்டம்டர் 8ம் தேதி ஓணம் பண்டிகை வருவதால் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் கூடுதலாக 20 ரூபாய் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை, ஓரளவு ஈடு செய்ய முடியும்' என்றனர்.

Similar News