கூடலூர் அருகே யானை தாக்கி இருவர் பலி

கூடலூர் அடுத்த பந்தலூர் அருகேயுள்ள உப்பட்டி, பெருங்கரை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சாலையில் நடந்து சென்ற இரு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2021-03-25 16:45 GMT

நீலகிரி :  கடந்த சில நாட்களுக்கு முன் தந்தை மகன் என இருவரை யானை கொன்ற சம்பவம் நடந்த நிலையில் மீண்டும் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதே சமயம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

இந்நிலையில் பந்தலூர் உப்பட்டி பெருங்கரை பகுதியில் பணிக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சடையன் (55) எட்டிக் கண்ணு (60) என்ற இருவரையும் தேயிலை தோட்ட முட்புதரில் மறைந்திருந்த யானை தூக்கி வீசி கொன்றது.

உடனடியாக அப்பகுதியிலுள்ளவர்கள் கூச்சலிட்டதையடுத்து யானை வனப் பகுதிக்குள் சென்றது. வனத்துறையின் மெத்தன போக்கே யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் ஏற்பட காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யானை தாக்கி உயிரிழந்த இருவரின் உடலும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது.கடந்த இரண்டு மாதங்களில் யானை தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News