கூடலூர் நகராட்சியை தூய்மையாக வைக்க ஐடியா குடுங்க! பரிசை அள்ளுங்க!
கூடலூர் நகராட்சியை தூய்மையாக வைக்க ஐடியா தருபவர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சம் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம்அறிவிப்பு
கூடலூர் நகராட்சியின் தூய்மைக்கு ஆலோசனை வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டுமென ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூடலூர் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக வைத்திருக்கவும், தினசரி உருவாகும் கழிவுகளை புதுமையான தொழில் நுட்ப ரீதியில் அகற்றுவதற்கும் புதுமையான யோசனைகள் வரவேற்கப்படுவதாக ஆணையாளர் கூறினார்.
இதில் சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு மாநில அளவில் பாராட்டு வெகுமதி வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக 5 லட்சம், இரண்டாம் பரிசு 2.5 லட்சம், மூன்றாம் பரிசு 1.5 லட்சம், நான்காம் பரிசாக ஒரு லட்சம், ஐந்தாம் பரிசாக 75 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
எனவே வரும் 6ஆம் தேதிக்குள் நகராட்சி பகுதியில் தூய்மையைப் பாதுகாக்க சிறந்த ஆலோசனை தெரிவிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்