கூடலூரில், குழந்தைகள் காப்பகத்தை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு

Nilgiri News, Nilgiri News Today- கூடலூர் பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்தில், குழந்தைகள் காப்பகத்தை, காட்டு யானை சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-06-28 03:23 GMT

Nilgiri News, Nilgiri News Today- காட்டுயானை தாக்குதலால்  சிதிலமடைந்த குழந்தைகள் காப்பகம்.

Nilgiri News, Nilgiri News Today- கூடலூர் தாலூகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மூலக்காடு ஆதிவாசி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் காலையில் ஆதிவாசி மக்கள் தோட்டம் மற்றும் கூலி வேலைக்கு செல்வதால் அவர்களின் குழந்தைகளை பராமரிக்க காப்பகம் இல்லாமல் இருந்து வந்தது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் பரிந்துரையின் பேரில், தனியார் தொண்டு அமைப்பு சார்பில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் காட்டு யானை ஒன்று தினமும் அப்பகுதிக்குள் புகுந்து வருகிறது. தொடர்ந்து ஆதிவாசி மக்களின் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் காட்டு யானை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு காட்டு யானை வந்து ஆதிவாசி மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இந்த சமயத்தில் மூங்கில் தட்டிகளால் (கொட்டகை) ஆன குழந்தைகள் காப்பகத்தை காட்டு யானை உடைத்து முழுமையாக சேதப்படுத்தியது. இதனால் அங்கு வைத்திருந்த இருக்கைகள், மேஜை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமானது. பின்னர் அதிகாலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ஆதிவாசி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தேவர்சோலை போலீசார் மற்றும் கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News