தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்: சிக்குமா புலி?
தொடர்ந்து 6 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் போக்கு காட்டி வரும் புலி இன்றாவது சிக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை, தேவன் எஸ்டேட், மேபீல்டு போன்ற பகுதிகளில் புலி ஒன்று அடிக்கடி மாடுகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வருவது வழக்கமாக உள்ளது. இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 3 மனிதர்களையும் இந்த புலி கொன்று ஆட்கொல்லி புலியாக மாறியுள்ளது.
மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்து சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதாக வனத்துறையினர் கூறியதை அடுத்து இப்பகுதி முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள், கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் மருத்துவ குழுவோடு இணைந்து 60-க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று பிரத்யேக உடை அணிந்து புலியை தேடுவதற்காக இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்களோடு 3 வன கால்நடை மருத்துவக் குழுவும் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தயாராகி உள்ளனர். அங்காங்கே புலி நடமாட்டம் உள்ளதா என கண்டறிய பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று மாலை இந்த ஆட்கொல்லி புலி இப்பகுதியிலிருந்து தேயிலைச் செடி வழியாக வனப்பகுதிக்குள் சென்று வனத்துறைக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் 6-வது நாளாக தொடர்ந்து வனத்துறை அப்பகுதியில் முகாமிட்டு புலியை பிடிப்பதில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.