கூடலூரில் மீண்டும் யானைகள் நடமாட்டம் - மக்கள் பீதி
கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் திரிந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.;
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன அந்த யானைகளை விரட்டக்கோரி, பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் உறுதிஅளித்தனர்.
அதன்படி, அங்குள்ள தனியார் தோட்டத்தில் புகுந்த ஒரு காட்டுயானையை, வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் பிரகாஷ்மற்றும் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மாக்கமூலா பகுதியில், மாலை 3 மணிக்கு மற்றொரு காட்டுயானை புகுந்தது. அது, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. இதனால், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தவிர, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் தட்டப்பள்ளம் அருகே காட்டுயானை சுற்றித்திரிந்தது. அவ்வப்போது சாலையையும் கடக்க முயன்றது. அப்போது சிலர், ஆபத்தை உணராமல், காட்டுயானையை செல்போனில் புகைப்படம் மட்டும் வீடியோ எடுத்தனர். அவர்களை வனத்துறையினர் எச்சரிக்கை அனுப்பினர்.