கூடலூரில் சேற்றில் இறந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர்
கூடலூரில், சேற்றில் இறந்த குட்டி யானை மீட்கப்பட்டது; இதன் மூலம், அருகே காத்திருந்த தாய் யானையின் பாசப்போராட்டம் முடிவுக்கு வந்தது.;
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள செம்பாலா தேயிலைத் தோட்ட பகுதியில், கடந்த 10 நாட்களாக ஒரு குட்டியுடன், இரண்டு யானைகள் சுற்றி திரிந்தன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவ்வழியாக செல்லும் போது நீரோடை சேற்றில் சிக்கி , குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
உயிரிழந்த குட்டி யானையை , பிரேத பரிசோதனை செய்ய வன ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் சென்ற பொது, இறந்த குட்டி யானை அருகே செல்ல விடாமல், தாய் யானையும் மற்றொரு யானையும் பாதுகாப்புக்கு நின்றிருந்தன. இவ்வாறு, உணவின்றி, கடந்த இரண்டு நாட்களாக, இறந்த குட்டியை இரு யானைகளும் பாதுகாத்து வந்தன.
இந்நிலையில், வேறு வழியின்ரி, வன ஊழியர்கள் பட்டாசு வெடித்து தாய் யானையும், மற்றொரு யானையையும் விரட்டினர். அதன் பின்னர், இறந்த குட்டியை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனால், மூன்று நாட்களாக இருந்த குட்டி மற்றும் தாய் யானை இடையே நீடித்த பாசப் போராட்டம் முடிவுக்கு வந்தது.