நீலகிரி முதுமலையில் யானைகள் தினக் கொண்டாட்டம்
உலக யானைகள் தினமான இன்று முதுமலையிலுள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.
நீலகிரி : கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உலக யானைகள் தின விழா கொண்டாட்டம். யானைகளுக்கு சிறுவர்கள் பழங்கள் கரும்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 29 வளர்ப்பு யானைகளுக்கு பிடித்த உணவுகளான பழங்கள், கரும்பு உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அத்துடன் முதுமலை புலிகள் காப்பக ஆதிவாசி குடியிருப்புகளில் வசிக்கும் சிறுவர்கள் மூலம் யானைகளுக்கு பலாப்பழம், பைன் ஆப்பிள், வாழை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு யானையின் வாழ்க்கைமுறை வனவளத்தில் யானையின் முக்கியத்துவம்,யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டுகின்றது. முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த யானைகள் முகாம் சர்வதேச அளவில் சிறந்த யானைகள் முகாமாக கருதப்படுகிறது.
இங்குள்ள யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வனப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும் அவற்றை பிடித்து கூண்டில் அடைத்து பழக்கப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முதுமலை முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வன உயிரின ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் யானைகள் குறித்த பல்வேறு தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். எனவே யானைகள் தினமான இன்று யானைகளை பாதுகாப்பதும் மற்றும் யானைகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருவதும் நிதர்சனமான உண்மை. யானைகளை காப்போம்,வனங்களை நேசிப்போம்.