கூடலூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை; ரூ. 31 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
கூடலூரில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க, கட்டுமான பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை பிரிவுகளை உருவாக்க, ரூ. 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடலூரில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய டாக்டர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ பிரிவு சிகிச்சை வசதிகள் இல்லாததால் நோயாளிகள், கர்ப்பிணிகள் ஊட்டி தலைமை அரசு மருத்துவமனை அல்லது கேரள மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கி. மீ., தூரம் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால் அங்கு செயல்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை கூடலூரில் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கூடலூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்கள் கட்டுமானம் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தது.
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் ஆகியோர் நேற்று கூடலூர், பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர். கூடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைப்பது குறித்து வளாகத்தை பார்வையிட்டனர். மேலும் பல்வேறு மருத்துவ சிகிச்சை கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்தனர்.
தொடர்ந்து பந்தலூர் அரசு மருத்துவமனையில் அங்கு அனைத்து மருத்துவ பிரிவுகளிலும் சிகிச்சைகள் மேற்கொள்வது குறித்த ஆய்வு பணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி கூறுகையில், கூடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக செயல்படுத்துவதற்கு ரூ. 31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் தொடங்கப்படும் காது, மூக்கு, கண் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவ சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும். டயாலிசிஸ் செய்யப் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 34 டாக்டர்கள் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். இது தவிர ரூ. 1 கோடியில் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் பந்தலூர் தாலூகா அரசு மருத்துவமனையை மேம்படுத்த உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ. 5. 75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.