நீலகிரியில் டி23 புலியை பிடிக்க ரூ.11.34 லட்சம் செலவினம்!

நீலகிரியில், டி23 புலியை பிடிக்க சுமார் 11 லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.;

Update: 2022-03-12 00:45 GMT

பிடிபட்ட புலி (கோப்பு படம்) 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மற்றும் தேவன் எஸ்டேட், மே பீல்டு உள்ளிட்ட பகுதிகளில்,  கடந்த ஆண்டு 4 மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்துக்கொன்ற டி-23 புலியை பிடிக்க,  தமிழகம் கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

கிட்டத்தட்ட 23 நாட்களுக்கு மேலாக,  நான்கிற்கும் மேற்பட்ட வனக் கால்நடை மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், 3மோப்ப நாய்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக அக்டோபர் மாதம் 15ம் தேதி மசினகுடி பகுதியில் T23 புலி மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டு புலி மைசூர் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த டி23 புலி பிடித்ததற்கான செலவினங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. டி23 புலியை பிடிக்க செப்டம்பர் 24ஆம் தேதி முதல்,  அக்டோபர் 15ஆம் தேதி வரை, T23 புலியை பிடிக்க சுமார் 11 லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வனத்துறை பதில் அளித்துள்ளது.

இந்த புலியை பிடிக்க இரும்பு குண்டு வைத்தல், வாகன வாடகை, மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்கியது, உதகை கூடலூர் மற்றும் மசினகுடி வனக் கோட்ட பணியாளர்கள் மருத்துவ குழு தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர்களுக்கான உணவு, தண்ணீர், மற்றும் தேநீர் வழங்கிய உள்ளிட்ட செலவுகளை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News