பறவை காய்ச்சல் எதிரொலி: நீலகிரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை கொண்டுவர தடை விதித்து கலெக்டர் அம்ரித் உத்தரவு.;

Update: 2021-12-17 06:15 GMT

வாகனங்களை ஆய்வு செய்யும் காவல்துறையினர்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நீலகிரியில் பரவலை தடுக்க கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவதை கண்காணிக்க 8 சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை உதவி டாக்டர் தலைமையில் குழுவினர் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பறவைக்காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு இன பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளை பண்ணைக்குள் நுழையக்கூடாது. உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. உபகரணங்கள் மாதம் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் பரவாது. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும். எனவே கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டி உள்ள கர்நாடக மாநில பிற பகுதிகளிகளில் இருந்து கோழிகள், பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே கூடலூர் பகுதியில் உள்ள கர்நாடகா- கேரளா மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள். கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் பகவத்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News