கூடலூரை அடுத்த மசினகுடியில் யானைக்கு தீ வைத்த தங்கும் விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் உள்ள மசினகுடி பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் அப்பகுதியில் சுற்றி திரிந்தது.அந்த யானையை வனத் துறையினர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிடித்து காயத்திற்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு மசினகுடி பகுதியில் காதில் ரத்தம் சொட்ட பரிதாபமாக உலா வந்த யானையைப் பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்றபோது, பல லிட்டர் ரத்தம் வெளியேறியதால் யானை பரிதாபமாக உயிரிழந்தது.இதைத் தொடர்ந்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்த போது யானைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர் .
பின்னர் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர். இதனையடுத்து இதில் தொடர்புடையதாக பிரசாந்த்,ரேமண்ட் டீன் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டு கூடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் . இதை தொடர்ந்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்து குன்னூர் கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.