சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.;
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பின்ஸ் எலியாஸ் என்பவரிடம் தமிழக பகுதிக்குள் எம் சான்ட் லோடு ஏற்றி லாரி வருவதற்கு லாரி ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பேசி 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது காவலர் பிடிபட்டார்.
ரகசிய தகவலின் பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் ரசாயனம் தடவிய நோட்டுக்களை லாரி உரிமையாளர் வழங்கும் போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
மேலும் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் துப்பூரில் ஆய்வாளராக இருந்து அக்காவல் நிலையத்திலிருந்து உதகைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோதனை சாவடியில் லஞ்சம் பெற்ற ஆய்வாளரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.