ஊட்டியில் யானைக்கு தீ வைத்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி
ஊட்டியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.;
ஜானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிக்கி ராயன்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மாவனல்லா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 50 வயதுடைய காட்டுயானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஆனால் படுகாயம் காரணமாக அன்றே யானை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில் யானையின் காது பகுதியில் பலத்த தீக்காயம் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக வனத்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் மாவநல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் இருந்த சிலர் யானைக்கு தீ வைத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதில் ரிக்கி ராயன் என்பவரது விடுதி வழியாக வந்த யானையை விரட்டுதவதற்காக ரிக்கி ராயனின் சகோதரர் ரேமண்ட் டீன் மற்றும் இவர்களோடு பணியில் இருந்த பிரசாந்த் ஆகியோர் யானைக்கு தீ வைத்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய ரேமண்ட் டீன் விடுதிப்பணியாளர் பிராசாந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குற்றவாளி ரிக்கிராயன் கடந்த ஓராண்டு காலமாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த 16ம் தேதி கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த ரிக்கி ராயன் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உதகை மாவட்ட அமர்வு நிதிமன்றத்தில் ரிக்கி ராயன் ஜாமின் வேண்டி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.