நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பழுது - மீன்பிடி தடைக்காலம் 2 வாரம் நீட்டிக்க அரசுக்கு கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விடுக்கப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 வாரங்கள் நீடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் தமிழகத்தின் கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் தங்களுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். அதில் தடை காலம் காரணமாக 61 நாட்கள் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் படகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் படகுகளை சரி செய்ய முடியவில்லை. எனவே மீன்பிடி தடை காலத்தை மேலும் 2 வாரங்கள் நீடிக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மானிய விலையில் தரும் டீசலை 1800 லிட்டரில் இருந்து 4000 லிட்டராக தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.