எலச்சிபாளையம்:பெண்கள் கழிப்பிடம் கேட்டு மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பெண்கள் கழிப்பிடம் கேட்டு எலச்சிபாளையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
எலச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் நல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சம்பவம்பாளையம் அருகே உள்ள தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக, பொது கழிப்பிட வசதி இல்லை. இது தொடர்பாக, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்தனர். இதனால், நல்லிபாளையம் பகுதி மக்கள், அருகில் உள்ள அரசு இட்டேரி புறம்போக்கு இடத்தை பயன்படுத்தி வந்தனர்.
தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கான போதிய இடவசதி இல்லாததால் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெண்களுக்கான பொது கழிப்பிட வசதி அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, காந்தி ஆசிரமம் புதுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் சக்திவேலுவிடம் கோரிக்கை மனு அளித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சி.சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.குப்புசாமி ஆர்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.